Wednesday, March 23, 2016

ஆசுவாசம்

”சார் எந்திரீங்க” கிளீனர் பையன் எழுப்பின பிறகு தான் இறங்குமிடம் வந்ததே தெரிந்தது. இங்கு வருகிறேன் என்ற நினைப்பே நேற்று தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. இறங்கும் போது சுற்றி நின்றிருந்த ஆட்டோக்களில் ஒன்றை எடுத்து கம்பெனி முன் பதிவு செய்திருந்த ஹோட்டலை அடைந்தாயிற்று.

இன்று கம்பெனி மீட்டிங் முடித்த பிறகு நாளை மதியம் 2 மணிக்கு அப்படியே மும்பை கிளம்ப ப்ளைட் டிக்கட்டும் பையில் தயாராக இருக்கிறது. கம்பெனி மீட்டிங் முடிய எப்படியும் மதியம் ஆகி விடும். மதியத்திற்கு பின் அவளை பற்றி விசாரிக்க வேண்டும். அவள் வேறு வீட்டிற்கு குடி மாறி விட்டாள் என்பது தான் அவளை பற்றி நான் கேட்ட கடைசி செய்தி. இவ்வளவு பெரிய ஊரில் அதுவும் ஒரே நாளில் கண்டுபிடிப்பது சிரமம். இன்னும் வேறு வீடு கூட மாறி இருக்கலாம். விசாரிக்கலாம் என்றால் யாரிடம் விசாரிப்பது? ஐந்து வருடங்கள் சுற்றிய ஊர்; பழைய நண்பர்கள் யாரையாவது பிடித்தால் எப்படியும் விசாரித்துவிட முடியும். கண்டு பிடித்து போய் நின்றால் என்னை அடையாளம் தெரிந்து கொள்வாளா? பார்த்தால் பேசுவாளா? திருமணம் ஆகி இருக்குமா? இல்லை ஏன் வந்தாய் என சண்டைக்கு வருவாளா? தெரியாது! ஆனால் பார்க்க வேண்டும் போல இருந்தது.

இவ்வளவு நாட்கள் பார்க்கலாமா வேண்டாமா என்ற மனப்போராட்டத்திற்கு முடிவாக பார்த்து விடுவது என தீர்மானித்து இந்த மீட்டிங்கை ஒரு சாக்காக வைத்து இங்கு வந்திருக்கிறேன். நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஓடிவிட்டது ஆனால் அவள் மேல் இருக்கும் காதல் குறையவில்லை எனக்கு. நாட்கள் செல்ல செல்ல மறந்து விடுவேன் என்று தான் முதலில் நினைத்தேன் ஆனால் அது ஒரு புண் போல ஆகி மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து நாளுக்கு நாள் ரணம் முற்றி போய் கொண்டே தான் இருக்கிறது. அதுவும் ஒரு காரணம் இன்னும் நான் திருமணம் செய்யாமலிருக்க. அவளை கண்டுபிடித்து போய் பார்த்தால் மீண்டும் ஏற்று கொள்ள மாட்டாள் என்று தான் தோன்றுகிறது ஆனால் ஏற்று கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது என மனம் குறுக்கு உழவு ஓட்டுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் அதை தவற விட கூடாது என மனம் பதைபதைத்தது. இந்த மனபோரட்டத்திலேயே இத்தனை வருடம் ஓடி விட்டது.

நேரம் ஆகிவிட்டது என குளித்து முடித்து கிளம்பும் போது ரிசப்சனில் இருந்து அழைப்பு காம்ப்ளிமெண்டரி ப்ரேக் பாஸ்ட் தயார் என்று செய்தி. சாப்பிட்டு முடிக்கும் போது கால் டாக்சி வந்திருந்தது. மீட்டிங்கிற்கு சென்றது பின் மீட்டிங் முடிந்து சாப்பிட்டு விட்டு கிளம்பியது எல்லாம் நினைவில் ஒட்டவே இல்லை. ஊரில் எங்கு பார்த்தாலும் எல்லாமே அவளை ஞாபகப்படுத்துவதாகவே தோன்றியது.  ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நினைவு. மீண்டும் அந்த நாட்களுக்கே சென்று விட்டது போல ஒரு உணர்வு. தவறு செய்து விட்டேனோ? தவறாகவே இருந்தாலும் நடந்ததை இனி மாற்ற முடியாது. அந்த தவறை திருத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதையாவது தவற விட கூடாது என்றே பதறுகிறது. திரும்பி வரும் வழியில் அந்த பஸ் ஸ்டாப்பை பார்த்தேன். வண்டியை பக்கம் இருக்கும் பெட்டி கடையில் நிறுத்த சொன்னேன். எத்தனை நாட்கள் அந்த பஸ் ஸ்டாப்பில் இருவரும் உட்கார்ந்து பேசி இருப்போம். சரி அடுத்த பஸ்ஸுக்கு போய்க்கலாம் என்று எத்தனை பேருந்துகளை தவற விட்டிருப்போம்.

ஒரு கிங்ஸ் குடுங்க என்று வாங்கி அதை பற்ற வைக்கும் போது “மாப்ள” என்று ஒரு குரல் யார் என்று பார்த்தால் அவளின் சொந்தகார பையன் எனக்கும் நல்ல நண்பன். அவளுடன் நான் சுற்ற ஆரம்பித்த பிறகு விலக ஆரம்பித்து விட்டோம்.

எனக்கும் ஒரு கிங்ஸ் என ஒரு சிகரெட்டை வாங்கி பற்றி கொண்டே எத்தனை நாள் ஆச்சுடா, எப்படி இருக்க, எங்க இருக்க, எல்லாரும் தொடர்புல இருக்காங்க உன்னை தவிர என்று பேச ஆரம்பித்தான்.

அதே ஊர் அதே நண்பன் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டே ”எனக்கு இங்க தான் கம்பெனில ரூம் போட்டு இருக்காங்க, நாளைக்கு கிளம்பனும், இப்ப ப்ரியா இருக்கியா? வர்றயா சரக்கு அடிக்கலாம்” என்று கேட்டேன். ”இத்தனை நாள் கழிச்சு பாத்து இருக்கோம் நீ கூப்பிட்டு வராம என்ன பெரிய வெட்டி முறிக்குற வேலையா, வா போலாம்” என்றான். இவனிடம் பேசினால் எப்படியும் அவளை பற்றி விசாரித்து விடலாம். நாளைக்கே அவளை பார்த்தும் விடலாம். சற்று டார்ச் வெளிச்சம் தெரிவது போல தோன்றியது. இருளாகவே தெரியும் போது டார்ச் வெளிச்சம் பரவாயில்லை தான்.

ரூமிற்கு வந்த பிறகு சரக்கு உள்ளே போக போக பழம் கதைகள் பல பேசினோம். புகையும், மதுவும், மகிழ்ச்சியும் மிதமிஞ்சி போனது, இழந்தது காதல் மட்டும் அல்ல என புரிந்தது. ஆனால் எனக்கும் அவளை பற்றி எப்படி தொடங்குவது என தெரியவில்லை அவனும் அவளை பற்றி பேசாமல் தெளிவாகவே தவிர்த்து வந்தான்.

இடையில் ஆபீஸ் அழைப்புகள் வேறு; நான் போனை வெளியே செல்லும் போது ”மாப்ள, உன்னோட லேப் குடு நான் பேஸ்புக்ல உனக்கு ப்ரெண்ட் ரெக்குவஸ்ட் அனுப்புறேன்” என்றான். லேப்பை எடுத்து கொடுத்து விட்டு நான் வெளியே வந்திருந்தேன்.

அழைப்பு முடிய 20 நிமிடம் ஆகி இருந்தது. திரும்ப உள்ளே வந்து பார்த்த போது மட்டை ஆகி இருந்தான். சிகரெட் பாக்கெட்டில் இன்னும் 3 சிகரெட் இருந்தது. பக்கத்தில் இருக்கும் சேரில் உட்கார்ந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்த போது மிகவும் லேசாக உணர்ந்தேன். லேப் டாப் அணைக்கபடாமல் இருந்தது. அருகில் போய் பார்த்த போது அவன் முகநூல் பக்கம் திறந்து இருந்தது. திடீர் என்று ஒரு எண்ணம் ”எப்படி இருந்தாலும் அவள் இவனுடைய நண்பர் வட்டத்தில் இருப்பாள், அதை பார்த்தால் என்ன?” என்று.

லேப் டாப்பை எடுத்து அவனது நண்பர் வட்டத்தில் தேடிய போது அவளுடைய ப்ரொபைல் கிடைத்தே விட்டது.சிகரெட் சுட்டதால் அதை அணைத்து விட்டு அவளுடைய ப்ரொபைலை திறந்து பார்த்தேன் சற்று பூசினால் போல் இருந்தாள், திருமணம் ஆகி இருந்தது. கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள், குழந்தை வேறு. மிக நெருங்கியவர்களுக்கு மட்டும் தெரிவது போல ப்ரைவசி செட்டிங்கில் சில புகைப்படங்கள்.

நெடுநாள் படுக்கையில் இருந்தவன் இறந்தது போல ஒரு ஆசுவாசம். நான் நினைத்தது போல் நடந்ததை திருத்தி கொள்ள இனி எந்த வாய்ப்பும் இல்லை. இழந்தது இழந்தது தான். அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்ற சந்தோசம் ஒரு பக்கம். இனி நெருடல் இல்லை. மிச்சம் இருக்கும் சிகரெட்டுகளில் ஒன்றை எடுத்து பற்ற வைத்து ஆழமாக இழுத்து புகை விட்டதில் மன உறுத்தலும் வெளியே சென்றது போல ஒரு உணர்வு. அவன் தெரிந்தே தான் முகநூலை மூடாமல் படுத்து இருக்கிறான் என்றே பட்டது எனக்கு. 

Monday, January 13, 2014

வீரம்

எல்லோரும் தாடி வெச்சிருக்கப்ப‌வே கண்டு புடுச்சு இருப்பீங்க இது ஒரு சண்ட படம்னு. அஜித்தோட 2 தம்பிகள் கல்லூரியில படிக்குறாங்களாம். அந்த‌ கல்லூரியில நடக்கும் ஒரு சண்டைய சாக்கா வெச்சி அஜித் மற்றும் அவரது 4 தம்பிகள அறிமுகபடுத்துறாரு டைரக்டர். ஆனா அதுக்கு அப்புறம் அந்த 2 தம்பிகள் கல்லூரி போற மாதிரி ஒரு காட்சி கூட இல்லை.  அண்ணன் தம்பிகள் யாரும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு இருக்காங்க. ஆனா 2 தம்பிகள் பல வருசமா காதலிக்குறாங்க. அண்ணனையும் ஒரு பொண்ண காதலிக்க வெச்சா த‌ங்களோட காதலுக்கு அண்ணன் தடை போட மாட்டாருனு திட்டம் போடுறாங்க. அஜித்தோட பால்ய சினேகிதன் மூலமா அஜித்துக்கு "கோப்பெரும்தேவி" அப்பிடிங்குற பேர் மேல ஒரு மோகம்னு தெரிஞ்சுக்குறாங்க. அப்பவே நமக்கு தெரிஞ்சுடுது தமன்னா பேரு அதான்னு. வழக்கம் போல‌ ரவுடி கதாநாயகனுக்கு சோடி ரவுடியிசம் பிடிக்காத கதாநாயகி பாத்திரம் தமன்னாவுக்கு. படத்துல அவங்களோட‌ மொத்த‌ வசனத்த ஒரு போஸ்ட் கார்டுல எழுதிடலாம். அப்புறம் எப்படியோ அஜித்தோட தம்பிகள் சிரமபட்டு அஜித்தையும் தம்ன்னாவயும் காதலிக்க வெச்சுடுறாங்க. தமன்னாவுடன் அஜித் தமன்னா வீட்டுக்கு போகும் போது ஒரு ரவுடி கும்பல் தாக்குது. அதனால கடுப்பாகுற தமன்னா அஜித்த விட்டு விலகிடுறாங்க.

                                               <இடைவேளை>

தம்பிகளின் வற்புறுத்தலால் அஜித் தமன்னா வீட்டுக்கு சேவிங் பண்ணீட்டு போறார் (ரவுடியிசத்த விட்டுட்டாராம்). தமன்னாவோட அப்பா நாசர், அஜித்த தன் வீட்டுல தங்க அனுமதிக்குறார். அங்க இருக்கும் போது மறுபடியும் அடியாட்கள் துரத்துராங்க. இரயில் தண்டவாளத்துக்கு பக்கத்துல சண்ட நடக்குது. அந்த அடியாட்கள் துரத்துவ‌து தன்னை இல்லை அந்த குடும்பத்தை என்று அஜித் அப்ப தான் கண்டுபிடிக்குறார். அது எந்த ஊருனே தெரியல இருக்குற ஒரு தண்டவாளத்துல 5 நிமிசத்துல 3 ரயில் போகுது.அங்க ஒரு ப்ளேஸ்பேக், வழக்கம் போல ஒரு அநியாயம், அத தட்டி கேக்கும் நாசர், அதனால அவர கொல்ல துடிக்குற ஒரு வில்லன். வில்லன் தன் குடும்பத்தை கொல்ல துடிப்பது நாசருக்கு தெரியாது. வில்லனுக்கும் நாசர் குடும்பத்துக்கும் நடுவுல அஜித். வழக்கம் போல வில்லனின் எல்லா முயற்சிகளையும் தடுத்து விடுகிறார் அஜித். கஷ்டபடுற பையன் பார்ட் டைமா வேலைக்கு போற மாதிரி நாசர் குடும்பத்துக்கு தெரியாமல் அஜித் பார்ட் டைமா கொலை பண்றார் அதுவும் கீரை அறுக்குற மாதிரி கொத்து கொத்தா. இது ஒரு கட்டத்துல நாசருக்கு தெரிய வருது. அஜித் தன்னோட பகை தன்னை துரத்துவதா சொல்லிடுறார். நாசர் அஜித்துக்கு தன் பெண்ணை கொடுக்க மறுத்து விடுகிறார். அப்பவே நமக்கு தெரிஞ்சுடுது வழக்கம் போல ஒரு கிளைமேக்ஸ் சண்டை, பழசெல்லாம் தெரிஞ்சு அஜித்த மன்னிச்சு ஏத்துக்கும் நாசர் குடும்பம், etc. அஜித் வில்லனை கொன்று விடுகிறார் என்பதை சொல்ல தேவை இல்லை.

இதுல முக்கியமான விசியம் என்னன்னா அஜித்தோட தம்பிக பேரு கூட படத்துல சொல்லலை. தமன்னா அஜித்த எங்க அங்கிள்னு கூப்புட்டுருவாங்களோனு பயமா இருக்கு. சந்தானத்து காமெடிய விட அஜித் ரசிகர்கள் காமெடி படு சூப்பர். அஜித் படத்துல மொத 10 நிமிசம் கதாபாத்திரங்களை அறிமுக படுத்தீட்டு நேரா கிளைமேக்ஸ் போயிடுலாம், மிச்ச நேரத்துல 4 பாட்டு போக, அஜித்த நடக்க, நிற்க, உக்கார வெச்சு காமிச்சாலே அஜித் ரசிகர்களுக்கு போதுமானது. நீ எல்லாம் சிம்ரன் படத்த தான் 3 மணி நேரம் பார்பே ஆனா நா போஸ்டரயே 3 மணி நேரம் பார்ப்பேன் என்கிற அள‌வுக்கு போயிட்டு இருக்காங்க அஜித் ரசிகர்கள் .முரட்டுகாளை, தீனா, சண்டகோழி ஆகிய படங்களை பாதி சேர்த்து மீதி அஜித்தை சேர்த்து கிண்டியது தான் இந்த வீரம். குடுத்த காசு வீணா போச்சுனு நெனைக்குற அளவுக்கு இல்லை. அஜித்த பாத்து நீதான் என்னோட தலனு ஒருத்தன் கத்துனான், அப்ப நீ என்ன முண்டமானு கேட்டிருக்கலாம் ஆனா #ISNKK

Friday, February 8, 2013

மதமாற்றம்

அதொரு  சின்ன ஊரு, அந்த ஊருல ரொம்ப‌ சத்தியான சாமி கோயல் ஒன்னு இருந்துச்சு. ரொம்ப பழ‌சு, அந்த ஊருல இருக்குற வயசான கெழவியோட மாமியாருக்கு மாமியாருக்கே தெரியாதாமா அது எப்ப கட்டுனதுனு. அந்த ஊருல இருக்குற பசங்க எல்லாம் படிச்சு வேலைக்குனு வெளியூருக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. நாளாக நாளாக அந்த ஊர் பெரிசுகளுக்கு அதுக காலத்துக்கு அப்புறம் அந்த கோயில இடிச்சு நல்லபடியா கட்டுறதுகு ஆளில்லாம போயிருமோனு ஒரு எண்ணம் வந்துடுச்சு. ஒரு நாள் எல்லாப் பெரிசுகளும் அந்த கோயல்ல ஒன்னு கூடி ஒரு நல்ல நாளாப் பாத்து கோயில் வேலை ஆரம்பிக்காலாமுனு பேசுனாங்க.

”எல்லா வந்தாச்சானு” கேட்டுடே பேச்ச ஆரமிச்சாரு ரிட்டையார்டு வாத்தியார், ”அதாவது இந்த கோயில் இருக்குறது ரொம்ப சத்தியுள்ள சாமி,. நமக்கு எல்லாம் நெனைவு தெரிய ஆரமிக்குறதுக்கு மின்னாடியே எத்தனையோ தடவை கோயில இடிச்சு கட்டுறதுக்கு சாமிகிட்ட பூ கேட்டும் குடுக்கல, இப்பதான் கட்டுறதுக்கு பூ குடுத்துச்சு. அதுக்கு என்ன எப்புடி பண்ணலாமுனு உங்க மனசுக்குபட்டத சொல்லுங்க”னு சொல்லீட்டு உக்காந்தாரு.

நம்மகிட்டதான் பேசுனு சொல்லீட்டா போதுமே ஆளாளுக்கு பேசி சந்தக்கடையாட்டம் ஆயிருமல்லோ, அப்புடிதான் ஆச்சு கதை. ஒரு வழியா சம்பிரதாயப்படி கோயில் கட்டுறதுக்குனு ஒரு கமிட்டி போட்டாங்க. வாத்தியார் தான் தலைவர், மணியாரர் தம்பி துணைதலைவர், பெரிய ஊட்டுகாரன் செயலாளர், மில்லுகாரன் பொருளாளர், 5 பேர் உறுப்பினர்கள், மொடக்கடி பண்றதுக்குனே ஒருத்தன் இருப்பானல்ல அது நம்ம கோயமுத்தூர்காரன்.

ஸ்தபதி ஒருத்தன புடுச்சு கோயில் வேலை ஆரமிச்சு, சூடு புடுச்சுது. ஒரு பக்கம் வசூல் நடக்க, மறுபக்கம் வேலை நடந்துச்சு. வேலை நடக்குறப்ப அந்த ஊரு அய்யிர பாத்தங்க எப்ப கும்பாபிசேகம் வெக்கலாமுனு.

’வாங்க, வாங்க என்ன விசேசம் எல்லாரும் ஒட்டுக்கா வந்துருக்கீங்க’ -அய்யர்.

‘சாமி, உங்களுக்கு தெரியாதது இல்லை, நம்ம அம்மன் கோயில் இடிச்சு கட்டுறோம் அது விசியமாதான் பேசுலாமுனு’ - வாத்தியார்.

அய்யர் கேட்டாரு ’சாமி சைவமா, அசைவமானு’.

’சாமி, கொஞ்ச வருசத்துக்கு மின்னாடி வரைக்கும் கெடா வெட்டுவோம் அப்புறம் கெடா வெட்டுறவங்களுக்கு எல்லாம் பிரச்சனை அதிலிருந்து ஆரும் வெட்டுறது இல்லை’னாரு மில்லுகாரர்.

’என்னென்ன‌ சாமி இருக்குங்க கோயில்ல‌”- ‍அய்யர்.

’அம்மன் மட்டும் தாங்க ‍இருந்துங்க‌ சாமி’- பெரிய ஊட்டுகாரன்

’விநாயகர் இல்லையா’ - அய்யர்.

’இல்லைங்க சாமி’ - வாத்தியார்.

’அது அந்த காலத்துல ஆகம விதி தெரியாம கோயில் கட்டீட்டாங்க, எந்த கோயிலா இருந்தாலும் விநாயகர் இருக்கனும், ஏன்னா அவர்தான் முதற்கடவுள். ஸ்தபதி சொல்லீருப்பாங்களே’- அய்யர்.

’சொன்னாருங்க சாமி, அதான் புள்ளாரயும் வெக்க சொல்லீட்டோம்’ - ‍ மணியாரந்தம்பி

’எத்தனை அடுக்கு விமானம் வெக்குறிங்க’ - அய்யர்

’5 வெக்கலாமுனு இருக்கோம் சாமி, அப்புடியே நீங்க கும்பாபிசேகத்துக்கு ஒரு நாள் குறிச்சு நடத்தி குடுத்துடீங்கனா எல்லோருக்கும் சந்தோசம்’ - வாத்தியார்

மத்த விசியத்த எல்லாம் பேசீட்டு நாள் குறிச்சு குடுத்தார் அய்யர்.

ஒரு நாள் வழக்கம் போல நம்ம விழா கமிட்டி கூடுனப்ப,

’இந்த மாதிரி புதுசா கட்டுற கோயில்ல எல்லாம் பாத்திங்கன்னா விநாயகர் மட்டும் வெக்குறது இல்லை, கர்பகிருகத்துக்கு தெம்பற‌ம் புள்ளாரு வெச்சிருக்குறாங்க, வடவறம் முருகன் சந்நிதி இருக்குது, நா விசாரிச்ச வரைக்கும் புள்ளாரு இருந்தா முருகன் சந்நிதி இருக்கனுமுனு சொல்றாங்க‌’ன்னாரு மொடக்கடி புடுச்ச கோயமுத்தூர்காரர்.

அங்க ஆரமிச்சுது 7 1/2, ஏற்கன‌வே பணம் ப‌த்தாம கோயில கட்டி முடிக்குறதுக்கு வழி தெரியாம‌ இருக்குது நம்ம விழா கமிட்டி, இதுல இன்னொரு சந்நிதியானு எல்லாருக்கும் மனசுல ஒரு இது. அத தொட்டு பல பிரச்சனை வந்துருச்சு கமிட்டிகுள்ள, கோயில் வேலை நிக்குற அளவுக்கு போயிருச்சு.

அப்புறம் மில்லுகாரன், கோயில் வேலை நின்னா மறுபடியும் தொடங்க முடியாதுனு சொல்லி, நமக்கு என்ன தெரியும் எதுக்கும் அய்யருகிட்ட ஒரு வார்த்தை கேப்போம் அவரு சொல்லுறத ஏத்துக்கலாம்னு எல்லாருகிட்டையும் தனித்தனியா பேசி முடுச்சான்.
அய்யர் வீடு:
’வாங்க, வாங்க கோயல் வேலை எல்லாம் எந்த அளவுல இருக்குது’ன்னு கேட்டார் அய்யர்.
 ’அது எல்லாம் நல்லா போதுங்க சாமி, நமக்கு ஒரு சின்ன சந்தேகம் அத கேட்டுட்டு போகலாமுனு வந்தோம், நம்ம கோயமுத்தூர்காரர் ஒன்னு சொன்னாருங்க சாமி, அதாவது கோயில்ல புள்ளாரு இருந்தா முருகன் சந்நிதியும் இருக்கனுமுனு கேள்விபட்டாருங்களாமாம். அதனால் நம்ம கோயில்லையும் கட்டனும் சொல்றாரு.’ - மில்லுகாரர்.
’விநாயகர்  கூட முருகரும் இருந்தா நல்லதுனு. கட்டுறதே கட்டுறீங்க முருகர் ச ந் நிதியும் சேத்து கட்டிடீங்கனா செலவு மிச்சம். இப்ப விட்டிடீங்கனா அப்புறம் கட்டுறது முடியாத காரியம்’ன்னு சொன்னாரு அய்யரு.
அய்யரே சொல்லீட்டாரே அப்புறம் என்னனு கட்டுறது கட்டுறோம் முருகன் சந்நிதி சேத்தி கட்டீட்டா செலவோட செலவா போயிருமுனு முடிவு செஞ்சாங்க நம்ம விழா கமிட்டி.
எப்படியோ கோயில் செலவ சரிகட்ட ஒரு பக்கம் சீட்டு சேத்தலாமுனும் மறுபக்கம் கும்பாபிசேக வசூலையும் எடுத்துக்கலாமுனு முடிவு பண்ணுச்சு கமிட்டி.

குறிச்ச நாளில எப்படியோ அந்த கோயில் கும்பாபிசேகம் பட்டிமன்றம், பாட்டுக் கச்சேரினு தடபுடலா நடந்து முடிஞ்சது. கும்பாபிசேகத்துக்கு நல்ல கூட்டம். எதிர் பாத்தத விட அதிக வசூலும் கூட. கும்பாபிசேகம் முடிஞ்சதும் விழா கமிட்டி கூடுச்சு கணக்கு பாக்க. கும்பாபிசேக வரவ வச்சு பாதி கடன கட்டுலாமுனும் மீதிய   சீட்டு நடத்தி கட்டீறலானுமுனும் முடிவு பண்ணி,  எப்புடியோ கோயில் கட்டீட்டோம்கற சந்தோசத்துல விழா கமிட்டி கலைஞ்சு அவங்க அவங்க வீட்டுக்கு போனாங்க. இப்படியாக அந்த அம்மன் இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டது.