Friday, February 8, 2013

மதமாற்றம்

அதொரு  சின்ன ஊரு, அந்த ஊருல ரொம்ப‌ சத்தியான சாமி கோயல் ஒன்னு இருந்துச்சு. ரொம்ப பழ‌சு, அந்த ஊருல இருக்குற வயசான கெழவியோட மாமியாருக்கு மாமியாருக்கே தெரியாதாமா அது எப்ப கட்டுனதுனு. அந்த ஊருல இருக்குற பசங்க எல்லாம் படிச்சு வேலைக்குனு வெளியூருக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. நாளாக நாளாக அந்த ஊர் பெரிசுகளுக்கு அதுக காலத்துக்கு அப்புறம் அந்த கோயில இடிச்சு நல்லபடியா கட்டுறதுகு ஆளில்லாம போயிருமோனு ஒரு எண்ணம் வந்துடுச்சு. ஒரு நாள் எல்லாப் பெரிசுகளும் அந்த கோயல்ல ஒன்னு கூடி ஒரு நல்ல நாளாப் பாத்து கோயில் வேலை ஆரம்பிக்காலாமுனு பேசுனாங்க.

”எல்லா வந்தாச்சானு” கேட்டுடே பேச்ச ஆரமிச்சாரு ரிட்டையார்டு வாத்தியார், ”அதாவது இந்த கோயில் இருக்குறது ரொம்ப சத்தியுள்ள சாமி,. நமக்கு எல்லாம் நெனைவு தெரிய ஆரமிக்குறதுக்கு மின்னாடியே எத்தனையோ தடவை கோயில இடிச்சு கட்டுறதுக்கு சாமிகிட்ட பூ கேட்டும் குடுக்கல, இப்பதான் கட்டுறதுக்கு பூ குடுத்துச்சு. அதுக்கு என்ன எப்புடி பண்ணலாமுனு உங்க மனசுக்குபட்டத சொல்லுங்க”னு சொல்லீட்டு உக்காந்தாரு.

நம்மகிட்டதான் பேசுனு சொல்லீட்டா போதுமே ஆளாளுக்கு பேசி சந்தக்கடையாட்டம் ஆயிருமல்லோ, அப்புடிதான் ஆச்சு கதை. ஒரு வழியா சம்பிரதாயப்படி கோயில் கட்டுறதுக்குனு ஒரு கமிட்டி போட்டாங்க. வாத்தியார் தான் தலைவர், மணியாரர் தம்பி துணைதலைவர், பெரிய ஊட்டுகாரன் செயலாளர், மில்லுகாரன் பொருளாளர், 5 பேர் உறுப்பினர்கள், மொடக்கடி பண்றதுக்குனே ஒருத்தன் இருப்பானல்ல அது நம்ம கோயமுத்தூர்காரன்.

ஸ்தபதி ஒருத்தன புடுச்சு கோயில் வேலை ஆரமிச்சு, சூடு புடுச்சுது. ஒரு பக்கம் வசூல் நடக்க, மறுபக்கம் வேலை நடந்துச்சு. வேலை நடக்குறப்ப அந்த ஊரு அய்யிர பாத்தங்க எப்ப கும்பாபிசேகம் வெக்கலாமுனு.

’வாங்க, வாங்க என்ன விசேசம் எல்லாரும் ஒட்டுக்கா வந்துருக்கீங்க’ -அய்யர்.

‘சாமி, உங்களுக்கு தெரியாதது இல்லை, நம்ம அம்மன் கோயில் இடிச்சு கட்டுறோம் அது விசியமாதான் பேசுலாமுனு’ - வாத்தியார்.

அய்யர் கேட்டாரு ’சாமி சைவமா, அசைவமானு’.

’சாமி, கொஞ்ச வருசத்துக்கு மின்னாடி வரைக்கும் கெடா வெட்டுவோம் அப்புறம் கெடா வெட்டுறவங்களுக்கு எல்லாம் பிரச்சனை அதிலிருந்து ஆரும் வெட்டுறது இல்லை’னாரு மில்லுகாரர்.

’என்னென்ன‌ சாமி இருக்குங்க கோயில்ல‌”- ‍அய்யர்.

’அம்மன் மட்டும் தாங்க ‍இருந்துங்க‌ சாமி’- பெரிய ஊட்டுகாரன்

’விநாயகர் இல்லையா’ - அய்யர்.

’இல்லைங்க சாமி’ - வாத்தியார்.

’அது அந்த காலத்துல ஆகம விதி தெரியாம கோயில் கட்டீட்டாங்க, எந்த கோயிலா இருந்தாலும் விநாயகர் இருக்கனும், ஏன்னா அவர்தான் முதற்கடவுள். ஸ்தபதி சொல்லீருப்பாங்களே’- அய்யர்.

’சொன்னாருங்க சாமி, அதான் புள்ளாரயும் வெக்க சொல்லீட்டோம்’ - ‍ மணியாரந்தம்பி

’எத்தனை அடுக்கு விமானம் வெக்குறிங்க’ - அய்யர்

’5 வெக்கலாமுனு இருக்கோம் சாமி, அப்புடியே நீங்க கும்பாபிசேகத்துக்கு ஒரு நாள் குறிச்சு நடத்தி குடுத்துடீங்கனா எல்லோருக்கும் சந்தோசம்’ - வாத்தியார்

மத்த விசியத்த எல்லாம் பேசீட்டு நாள் குறிச்சு குடுத்தார் அய்யர்.

ஒரு நாள் வழக்கம் போல நம்ம விழா கமிட்டி கூடுனப்ப,

’இந்த மாதிரி புதுசா கட்டுற கோயில்ல எல்லாம் பாத்திங்கன்னா விநாயகர் மட்டும் வெக்குறது இல்லை, கர்பகிருகத்துக்கு தெம்பற‌ம் புள்ளாரு வெச்சிருக்குறாங்க, வடவறம் முருகன் சந்நிதி இருக்குது, நா விசாரிச்ச வரைக்கும் புள்ளாரு இருந்தா முருகன் சந்நிதி இருக்கனுமுனு சொல்றாங்க‌’ன்னாரு மொடக்கடி புடுச்ச கோயமுத்தூர்காரர்.

அங்க ஆரமிச்சுது 7 1/2, ஏற்கன‌வே பணம் ப‌த்தாம கோயில கட்டி முடிக்குறதுக்கு வழி தெரியாம‌ இருக்குது நம்ம விழா கமிட்டி, இதுல இன்னொரு சந்நிதியானு எல்லாருக்கும் மனசுல ஒரு இது. அத தொட்டு பல பிரச்சனை வந்துருச்சு கமிட்டிகுள்ள, கோயில் வேலை நிக்குற அளவுக்கு போயிருச்சு.

அப்புறம் மில்லுகாரன், கோயில் வேலை நின்னா மறுபடியும் தொடங்க முடியாதுனு சொல்லி, நமக்கு என்ன தெரியும் எதுக்கும் அய்யருகிட்ட ஒரு வார்த்தை கேப்போம் அவரு சொல்லுறத ஏத்துக்கலாம்னு எல்லாருகிட்டையும் தனித்தனியா பேசி முடுச்சான்.
அய்யர் வீடு:
’வாங்க, வாங்க கோயல் வேலை எல்லாம் எந்த அளவுல இருக்குது’ன்னு கேட்டார் அய்யர்.
 ’அது எல்லாம் நல்லா போதுங்க சாமி, நமக்கு ஒரு சின்ன சந்தேகம் அத கேட்டுட்டு போகலாமுனு வந்தோம், நம்ம கோயமுத்தூர்காரர் ஒன்னு சொன்னாருங்க சாமி, அதாவது கோயில்ல புள்ளாரு இருந்தா முருகன் சந்நிதியும் இருக்கனுமுனு கேள்விபட்டாருங்களாமாம். அதனால் நம்ம கோயில்லையும் கட்டனும் சொல்றாரு.’ - மில்லுகாரர்.
’விநாயகர்  கூட முருகரும் இருந்தா நல்லதுனு. கட்டுறதே கட்டுறீங்க முருகர் ச ந் நிதியும் சேத்து கட்டிடீங்கனா செலவு மிச்சம். இப்ப விட்டிடீங்கனா அப்புறம் கட்டுறது முடியாத காரியம்’ன்னு சொன்னாரு அய்யரு.
அய்யரே சொல்லீட்டாரே அப்புறம் என்னனு கட்டுறது கட்டுறோம் முருகன் சந்நிதி சேத்தி கட்டீட்டா செலவோட செலவா போயிருமுனு முடிவு செஞ்சாங்க நம்ம விழா கமிட்டி.
எப்படியோ கோயில் செலவ சரிகட்ட ஒரு பக்கம் சீட்டு சேத்தலாமுனும் மறுபக்கம் கும்பாபிசேக வசூலையும் எடுத்துக்கலாமுனு முடிவு பண்ணுச்சு கமிட்டி.

குறிச்ச நாளில எப்படியோ அந்த கோயில் கும்பாபிசேகம் பட்டிமன்றம், பாட்டுக் கச்சேரினு தடபுடலா நடந்து முடிஞ்சது. கும்பாபிசேகத்துக்கு நல்ல கூட்டம். எதிர் பாத்தத விட அதிக வசூலும் கூட. கும்பாபிசேகம் முடிஞ்சதும் விழா கமிட்டி கூடுச்சு கணக்கு பாக்க. கும்பாபிசேக வரவ வச்சு பாதி கடன கட்டுலாமுனும் மீதிய   சீட்டு நடத்தி கட்டீறலானுமுனும் முடிவு பண்ணி,  எப்புடியோ கோயில் கட்டீட்டோம்கற சந்தோசத்துல விழா கமிட்டி கலைஞ்சு அவங்க அவங்க வீட்டுக்கு போனாங்க. இப்படியாக அந்த அம்மன் இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டது.